மாஸ்கோ, மே 15 - 2014ஆம் ஆண்டு உக்ரைனின் வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH17 தொடர்பான விவகாரத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாக மாஸ்கோ, கிரெம்ளினில் புடினுடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பிரதமர் கேள்வி எழுப்பினார்.
மேலும், ரஷ்யாவே காரணம் என்று அனைத்துலக பொது விமானப் போக்குவரத்து மன்றம், ICAO-யின் புதிய கண்டுப்பிடிப்புகள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
எம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி பயணித்த மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MHI7, கிழக்கு உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்ததோடு, தாம் எழுப்பப்பட்ட கேள்விகளைப் புடின் கவனமாகக் கேட்டதாக பிரதமர் கூறினார்.
முழுமையான மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் இந்தப் பிரச்சனையை அரசியலாக்கக் கூடாது என்று தான் கோரியதாக ரஷ்ய அதிபர் வலியுறுத்தியுள்ளார். இதனை அன்வார் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணை முழுமையாக இருக்க வேண்டும் என்று மாஸ்கோ ஆரம்பத்தில் இருந்தே கேட்டு வந்ததாகவும், அறிக்கை மிகவும் நம்பகமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கு ரஷ்யா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் புடின் வலியுறுத்தினார்.
-பெர்னாமா


