NATIONAL

டிரெய்லர் சம்பந்தப்பட்ட விபத்தில்  ஆறு வாகனங்கள் சேதம் - பந்திங்கில் சம்பவம்

15 மே 2025, 6:42 AM
டிரெய்லர் சம்பந்தப்பட்ட விபத்தில்  ஆறு வாகனங்கள் சேதம் - பந்திங்கில் சம்பவம்

ஷா ஆலம், மே 15 - கட்டுப்பாட்டை இழந்த டிரெய்லர் லோரி ஐந்து வாகனங்களை மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம்  கிள்ளான்-பந்திங் சாலையின்  32.5வது  கிலோமீட்டரில் பந்திங் நகரின் வங்கி ஒன்றின்  முன்னால் நேற்று நிகழ்ந்தது.

எனினும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட  இரண்டு பெண்கள் உட்பட 20 முதல் 50 வயதுடைய எட்டு பேரும் காயமின்றி உயிர்தப்பியதாகக்  கோல லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது  அக்மல்ரிசல் முகமது  ரட்ஸி தெரிவித்தார்.

மதியம் 12.15 மணியளவில் நிகழ்ந்த  இந்த விபத்தின் போது டெங்கில் நகரிலிருந்து சுங்கை புவாயா  நோக்கிச் சென்று கொண்டிருந்த  டிரெய்லர்  கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு டிரெய்லரின் வலது பின்புறத்தில் மோதியது தொடக்கக்கட்ட ​​விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த மோதலின் காரணமாக வோல்வோ டிரெய்லர் முன்னோக்கி நகர்ந்து எதிரே  நின்று கொண்டிருந்த புரோட்டான் எக்ஸ் 90, புரோட்டான் பெர்சோனா, புரோட்டான் ஜென்2 மற்றும் டோயோட்டா ஆல்பார்ட் ஆகிய வாகனங்களை  மோதியது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சாலையின் ஓரத்தில் உள்ள பார்க்கிங் இடத்திற்குள் நுழைவதற்காக காத்திருந்த  புரோட்டான் ஜென்2 காருக்கு வழிவிட்டு அனைத்து வாகனங்களும் நின்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது என அவர் சொன்னார்.

நாற்பது  வயதுடைய டிரெய்லர் ஓட்டுநர் பந்திங்கில் உள்ள ஒரு தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவருக்கு  செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் உள்ளது. மேலும் சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருளைப் பயன்படுதவில்லை என்பது  உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

இந்த வழக்கு 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43 (1)வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ 011-18539115 அல்லது 03-31872222 என்ற எண்களில் புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் மஸ்ரோல் முகமது டினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.