ஷா ஆலம், மே 15 - சாலை விபத்துகள் தொடர்ந்து நிகழ்வதைத் தடுக்க
வாகனமோட்டிகள் குறிப்பாக கனரக வாகனங்களைச் செலுத்துவோருக்கு
எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி மேன்மை தங்கிய சிலாங்கூர்
சுல்தான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
மரணம் அல்லது காயங்களை ஏற்படுத்தும் விபத்துக்கு காரணமானவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனையோடு அவர்களின் வாகனமோட்டும் லைசென்சும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார்.
படிப்பினையாக இருக்கும் வகையிலும் ஓட்டுநர்கள் சாலையை
கவனமுடன் பயன்படுத்துவதை உறுதி செய்யும் வகையிலும்
சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை
எடுக்கப்படுவது அவசியம் என்று சிலாங்கூர் அரச பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டார்.
இவ்வகாரத்தில் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என
சுல்தான் விரும்புகிறார். சாலை பாதுகாப்பு, குறிப்பாக கவனக் குறைவாக
செயல்படும் மற்றும் பாதுகாப்பு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத
வாகனமோட்டிகள் குறித்த கவலையைப் பல முறை எடுத்துரைத்துள்ளார்.
சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக்
கருத்தில் கொண்டு விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்று சுல்தான் விரும்புகிறார் என அந்த பதிவில்
கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களை வேலைக்கு எடுக்கும் போது
கடுமையான மதிப்பீட்டு நடைமுறைகளைக் கடைபிடிக்கும்படி பேருந்து
உள்ளிட்ட கனரக வாகன நிறுவன நடத்துவர்களை அவர் வலியுறுத்தினார்.
வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்களின் தகுதி போன்ற
விஷயங்களில் காட்டும் மெத்தனத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை
அலட்சியமான கண்ணோட்டத்திலும் ஒரு கண்ணை மூடிக் கொண்டும்
பார்க்க க்கூடாது என்று சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவர்
நினைவுறுத்தினார்.
எந்த பாவமும் அறியாத அப்பாவிகள் குறிப்பாக நாட்டின் அமைதிக்காகப்
பாடுபடும் தருணத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் இனியும் நிகழாது எனத்
தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் சுல்தான் குறிப்பிட்டார்.


