ஷா ஆலம், மே 15- கெஅடிலான் ராக்யாட் கட்சியை வலுப்படுத்துவதற்கும்
ரிபோர்மாஸி கொள்கையைத் தொடர்வதற்கும் எதிர்வரும் 16வது பொதுத்
தேர்தலில் குறைந்த 50 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல அக்கட்சி
இலக்கு நிர்ணயித்துள்ளது.
கட்சித் தேர்லில் போட்டியிடும புதிய தலைமைத்துவ அணியின் முக்கிய
வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இது விளங்குவதாக சிலாங்கூர் மாநில
கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கூறினார்.
இன்னும் 38 ஆண்டுகளில் 100 ஆண்டு நிறைவை எட்டவுள்ள
மலேசியாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தயாரித்துள்ள
ரிபோர்மாஸி பேராட்டத்தின் அடித்தளம் மூலம் நிறைவு செய்ய வேணடும்
என்று கட்சியின் உதவித் தலைவர் வேட்பாளருமான அவர்
வலியுறுத்தினார்.
ஆகவே, மலேசியா 100 ஆண்டை எட்டும் வரை நாட்டின் கொள்கைகளை
சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க, பிரதமர் ஆதரிக்கும் நுருள்
இஸ்ஸா அன்வார், சிம் ட்ஸி ட்ஸின் மற்றும் இதர உதவித் தலைவர்
மற்றும் தலைமைத்துவ மன்ற வேட்பாளர்கள் மூலம் அந்த அடித்தளம்
நிரப்பப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த அணி (டாமாய்) அடுத்த பொதுத் தேர்தலில் கெஅடிலான் கட்சி
குறைந்தது 50 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றுவதையும்
கெஅடிலான் தலைவராகவும் பிரதமராகவும் டத்தோஸ்ரீ அன்வார்
நீடிப்பதையும் உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர்
குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற
கட்சியின் துணைத் தலைவர் வேட்பாளர் நுருள் இஸ்ஸாவுடன் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.
இந்த முறை நடைபெறும் கட்சித் தேர்தல் பதவியைக் கைப்பற்றுவதை
மட்டும் நோக்கமாக கொண்டதல்ல. மாறாக, மக்கள் எதிர்நோக்கும்
பொருளாதாரம், கல்வி, தேசிய ஒற்றுமை மற்றும் பருவநிலை மாற்றம்
உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் களமாகவும் விளங்குகிறது
என அவர் கூறினார்.


