கோலாலம்பூர், மே 15 - சுபாங் ஜெயா, பாசார் மோடன் எஸ்.எஸ்.15 சந்தையில் சிலாங்கூர் குடிநுழைவுத் துறை நேற்று நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் 11 பெண்கள் உட்பட 38 வெளிநாட்டினர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர்.
காலை 11.15 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நடவடிக்கையில் 17 முதல் 53 வயதுக்குட்பட்ட இந்தோனேசிய, இந்திய மற்றும் மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் அமினஸ் கமாருடின் தெரிவித்தார்.
அவர்களில் பெரும்பாலோர் உணவு விடுதிகள் மற்றும் காய்கறி சந்தைகளில் கடை உதவியாளர்களாக வேலை செய்து வந்தனர் என அவர் தெரிவித்தார்.
முறையான வேலை அனுமதி இல்லாதது, காலாவதியான அனுமதியை வைத்திருந்தது மற்றும் நாட்டில் தங்குவதற்கான அனுமதி நிபந்தனைகளை பின்பற்றாதது போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று இந்நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக செமினி குடிநுழைவு தடுப்புக் காவல் முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் 1959/63 ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(சி), பியிவு 15(1)(சி) மற்றும் 1963ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் ஷரத்து 39(பி) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.


