கோலாலம்பூர், மே 15 - மலேசியாவிற்கு நேரடி விமான சேவையை விரைவில் தொடங்க ஏரோஃப்ளோட் உள்ளிட்ட ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
மலேசியாவிற்கும் அதன் மக்களுக்கும் எது சிறந்தது என்பதை நாங்கள் தீர்மானிக்க மலேசியா மற்றும் ஆசியான் ரீதியாக நாம் நடுநிலை நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என்று அவர் நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புடினுடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
ஏரோஃப்ளோட் ரஷ்யாவின் மிகப்பெரிய விமானக் குழுமமாகும். இதில் ரோஸ்சியா மற்றும் போபெடா விமான நிறுவனங்கள் அடங்கும்.
ரஷ்ய வர்த்தக விமானப் போக்குவரத்தில் ஏரோஃப்ளோட் குழுமம் மறுக்கமுடியாத தலைவராக உள்ளது. 2024 ஆம் ஆண்டில், ஏரோஃப்ளோட் 3 கோடியே 10 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றது. மற்ற ஏரோஃப்ளோட் குழும விமான நிறுவனங்களையும் சேர்த்தால் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியே 53 லட்சம் பேரை எட்டும்.
ஏரோஃப்ளோட் அதன் உள்நாட்டு வழித்தட வலையமைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துகிறது. இதில் நாட்டின் பிராந்தியங்களுக்கு இடையிலான விமானங்கள், சமூக நோக்குடைய போக்குவரத்து திட்டங்களை உருவாக்குதல் மற்றும் நாட்டின் தூர கிழக்கு மற்றும் கலினின்கிராட் நகரங்களுக்கான விமானங்களில் அதன் நிலையான கட்டணங்களை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்.


