உலு சிலாங்கூர், மே 15 - அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் 22வது
மலேசியப் போட்டியில் (சுக்மா) மகளிர் கால்பந்து போட்டிக்கான
அதிகாரப்பூர்வக் களமாகக் கோல குபு பாரு மின் அரங்கு
பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியம் ஆராயப்பட்டு வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு போட்டியாக விளங்கும் சுக்மாவை
ஏற்று நடத்துவதற்கான தகுதியை ஆராய்வதற்காக சுக்மா செயலகத்தின்
தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ முகமது யாஸிட் சைரி
தலைமையிலான குழுவினர் அண்மையில் இங்கு வருகை புரிந்ததைத்
தொடர்ந்து இந்த பரிந்துரை ஆராயப்பட்டு வருவதாக உலு சிலாங்கூர்
நகராண்மைக் கழகம் கூறியது.
இந்த அரங்கு நிர்ணயிக்கப்பட்டத் தரத்தைக் கொண்டிருப்பதை உறுதி
செய்வதற்காக பல்வேறு தரம் உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன என்று அது குறிப்பிட்டது.
ஒழுகும் கூரையைச் சரி செய்வது, தொழுகை இடத்தை விரிவுபடுத்தவது,
மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறைகளை அமைப்பது, ஆண், பெண்
விளையாட்டாளர்களுக்கான உடை மாற்றும் அறைகளை ஏற்பாடு செய்வது
இந்த அரங்கை இரவு வேளைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ராட்சத
விளக்குகளை சீரமைப்பது ஆகியவையும் அதில் அடங்கும்.
சுக்மா போட்டிக்கான அதிகாரப்பூர்வ இடங்களில் ஒன்றாக கோல குபு பாரு
மினி அரங்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் நாட்டில் திட்டமிடப்பட்ட முதலாவது
நகரம் என்ற முறையில் கோல குபு பாருவின் பெயரை பரிமளிக்கச் செய்ய
முடியும் என்று நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
இங்கு நீர் சறுக்கு, பாராகிளைடிங் மற்றும் வீரதீர விளையாட்டுகளில்
பங்கேற்பதற்குரிய வாய்ப்பினை விளையாட்டாளர்களும் நாடு முழுவதுமிருந்து வரும் பார்வையாளர்களும் பெற இயலும் என அது குறிப்பிட்டது.
இது தவிர, இம்மாநிலத்தில் சுக்மா போட்டியை ஏற்பாடு செய்வதன் மூலம்
வட்டார பொருளாதாரத்திற்கும் நேர்மறையான விளைவுகள் ஏற்படும்.
அதேசமயம் தேசிய நிலையிலான விளையாட்டுகளை
பிரபலப்படுத்துவதற்கும் வாய்ப்பும் கிட்டும் என நகராண்மைக் கழகம்
தெரிவித்தது.


