அங்காரா, மே 15 - சவுதி தலைநகர் ரியாத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நேற்று நடைபெற்ற உச்சநிலை மாநாட்டின் போது காஸா மீதான இஸ்ரேலியப் போரை முடிவுக்குக் கொண்டுவர வளைகுடா நாடுகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்ததோடு சிரியாவிற்கும் தங்களின் ஆதரவை புலப்படுத்தினர்.
கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற பிறகு நடைபெறும் டிரம்ப்பின் முதல் வெளிநாட்டுப் பயணத் தொடரை முன்னிட்டு இந்த வளைகுடா-அமெரிக்க உச்சநிலை மாநாடு நடைபெற்றதாக அனாடோலு ஏஜென்சி தெரிவித்தது.
இந்த உச்சநிலை மாநாட்டில் உரையாற்றிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், வாஷிங்டனுடனான உறவை "விவேக பங்காளித்துமானது " என்று வர்ணித்தார்.
காஸாவில் பதற்றத்தைத் தணிக்கவும் போரை முடிவுக்குக் கொண்டுவரவும் பாலஸ்தீனப் பிரச்சினைக்கு ஒரு விரிவான தீர்வைக் காணவும் நாங்கள் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கிறோம் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலிய இராணுவம் காஸா பகுதியில் ஒரு மிருகத்தனமான தாக்குதலைத் தொடர்கிறது. கடந்த 2023 அக்டோபர் முதல் 52,900 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.
சிரியாவின் இறையாண்மைக்கு எங்கள் மரியாதையையும் பாதுகாப்பை அடைவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். சிரியா மீதான தடைகளை நீக்குவதற்கான அதிபர் டிரம்பின் முடிவை நாங்கள் பாராட்டுகிறோம் இது சிரிய மக்களின் துயரத்தைத் தணிக்கும் என்று இளவரசர் முகமது தெரிவித்தார்.
சிரியாவின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மக்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அதன் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை நிறுத்தி சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் என்று குவைத்தின் அமீர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-சபா கோரிக்கை விடுத்தார்.
சிரியா மீதான தடைகளை நீக்குவதற்கான டிரம்பின் அறிவிப்பையும் அவர் பாராட்டினார். கடந்த செவ்வாயன்று ரியாத்தில் நடைபெற்ற 2025 சவுதி-அமெரிக்க முதலீட்டு மன்றத்தின் போது சிரியா மீதான அமெரிக்கத் தடைகளை நீக்க உத்தரவிடுவதாக டிரம்ப் அறிவித்தார்.
மத்திய கிழக்கு மற்றும் பரந்த உலகில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை அடைய டிரம்ப் எடுத்து வரும் பயனுள்ள அரசதந்திர முயற்சிகளை பஹ்ரேன் மன்னர் ஹமாத் பின் இசா அல்-கலீஃபா பாராட்டினார்.


