பட்டவொர்த், மே 14 - இன்று பட்டவொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில், பினாங்கு முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி மீது, 17 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
76 வயதான ராமசாமி மீது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவராக இருந்த போது கிட்டத்தட்ட 860,000 ரிங்கிட்டை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதாவது, அறப்பணி வாரியக் குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னரே, தங்க இரத கொள்முதலுக்கான 779,131 ரிங்கிட்ட பணத்தைக் காசோலை மற்றும் தந்தி மணி ஆர்டர் வடிவில் அவர் செலுத்தியுள்ளார்.
அதே போல் மருத்துவச் செலவுகளுக்கு 65,000 ரிங்கிட் காசோலை வடியில் பணம் செலுத்தியதாக 14-ஆவது மற்றும் 15-ஆவது குற்றச்சாட்டுளில் கூறப்பட்டது.
கடைசி 2 குற்றச்சாட்டுகளும், 15,000 ரிங்கிட் மதிப்பிலான 2 காசோலைகள் வடிவில் வழங்கப்பட்ட கல்வி நிதியுதவியை உட்படுத்தியவையாகும்.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து ராமசாமி விசாரணைக் கோரிய நிலையில், 78,000 ரிங்கிட் தொகையில் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.
கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும், அருகிலுள்ள MACC அலுவலகங்களில் மாதம் ஒரு முறை கையெழுத்துப் போட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி மீண்டும் மறுசெவிமெடுப்புக்கு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையில் சிறை, அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.


