தாவாவ், மே 14 - தங்கள் பள்ளித் தோழரான முகமது நஸ்மி அஜிசாட் முகமது நருல் அஸ்வானை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 13 லஹாட் டத்து தொழில்திறன் கல்லூரி மாணவர்களுக்கு எதிரானத் தீர்ப்பை ஜூன் 11 ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிபதி டத்தோ டங்கன் சிகோடோல் தீர்ப்புக்கான தேதியை நிர்ணயித்தார்.
முன்னதாக, பிரதிவாதிகளின் வாதங்களுக்கு அரசு தரப்பு பதிலளிக்க துணை அரசு வழக்கறிஞர் நூர் நிஸ்லா அப்துல் லத்தீஃப் அவகாசம் கோரினார்.
நூர் நிஸ்லாவுடன் துணை அரசு வழக்கறிஞர்களான இங் ஜுன் தாவோ மற்றும் பட்ரிசியா முகமது குஸ்ரி ஆகியோர் இந்த வழக்கை நடத்துகின்றனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 21 இரவு 9 மணி முதல் மார்ச் 22 காலை 7.38 மணி வரை லஹாட் டத்து தொழில்திறன் கல்லூரியில் உள்ள 7 ரெசாக் மற்றும் 5 பெலியன் விடுதி அறைகளில் 17 வயதான முகமது நஸ்மி ஐசாட்டை கூட்டாகக் கொலை செய்த குற்றச்சாட்டில் தற்காப்பு வாதம் புரியும்படி 16 முதல் 19 வயதுடைய 13 இளைஞர்களுக்கு நீதிபதி கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி உத்தரவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தண்டனைச் சட்டத்தின் 302 மற்றும் 34வது பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த சட்டத்தின்பட, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படிகள் வழங்கப்படும்.


