ரியாத் மே 14 - வளைகுடாவுக்கான தனது பயணத்தைத் தொடக்கியுள்ள
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், சிரியா மீதான பொருளாதாரத்
தடையை நீக்குவது மற்றும் சவூதி அரேபியாவிடமிருந்து 60,000 கோடி
டாலர் முதலீட்டை அமெரிக்கா பெறுவது உள்ளிட்ட வியப்புக்குரிய
அறிவிப்புகளை வெளியிட்டார்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப போரில் சிதைந்து போன
சிரியாவுக்கு இந்த பொருளாதாரத் தடை நீக்கம் மிகப்பெரிய ஊக்குவிப்பாக
விளங்குகிறது. நடப்பு அதிபர் அகது அல்-ஷாரா தலைமையிலான
கிளர்ச்சிப் படையினர் அதிபர் பாஷிர் அல்-அசாட் அரசாங்கத்தை கடந்த
டிசம்பர் மாதம் கவிழ்த்தனர்.
ரியாட்டில் நடைபெற்ற முதலீட்டு ஆய்வரங்கில் உரையாற்றிய டோனல்ட்
டிரம்ப், சவூதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின்
வேண்டுகோளின் பேரில் சிரியா மீதான பொருளாதாரத் தடையை
நீக்குவதாகக் கூறினார்.
பட்டத்து இளவரசருக்காக நான் இதனைச் செய்தேன் என்று நிகழ்வில்
கலந்து கொண்டவர்களின் பலத்த கரவோலிக்கிடையே டிரம்ப்
குறிப்பிட்டார். அந்த பொருளாதாரத் தடை முக்கியப் பணியை
ஆற்றியதாகவும் அந்நாடு முன்னோக்கிச் செல்வதற்குரிய நேரம் வந்து
விட்டதாகவும் அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கையானது அமெரிக்காவின் கொள்கையில் மாபெரும்
மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. சிரியாவை பயங்கரவாதத்திற்கு
ஆதரவளிக்கும் நாடாக அமெரிக்கா கடந்த 1976ஆம் ஆண்டு அறிவித்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு பொருளதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா
2011ஆம் ஆண்டு உள்நாட்டுப போர் தொடங்கியதைத் தொடர்ந்து
பொருளாதாரத் தடைகளை மேலும் விரிவுபடுத்தியது
இதனிடையே, இந்த அறிவிப்பானது சிரியாவின் மறுநிர்மாணிப்பில் புதிய
தொடக்கம் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அசாட் அல்-ஷிபானி
கூறினார்.


