தெலோக் இந்தான், மே 14 - ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் சாலையில் நேற்று காலை
ஒன்பது மத்திய சேமப்படை (எஃப்.ஆர்.யு.) உறுப்பினர்களைப் பலிகொண்ட விபத்து தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்ய 60க்கும் மேற்பட்ட நபர்களை போலீசார் அழைக்கவுள்ளனர்.
விபத்து நடந்த இடத்திலிருந்த எஃப்.ஆர்.யு. உறுப்பினர்களும் விபத்தில் சிக்கிய கற்களை ஏற்றிச் சென்ற லோரி நிறுவனத்தின் உரிமையாளரும் இதில் அடங்குவர் என்று ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஜைனல் அபிடின் தெரிவித்தார்.
ஒருதலைப்பட்சமான விசாரணைகளைத் தவிர்ப்பதற்காக மனித அலட்சியம், வாகனங்கள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் உள்பட அனைத்து கோணங்களிலிருந்தும் விசாரணையை நாங்கள் பார்ப்போம் என்று அவர் இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல்துறை விசாரணைக்கு உதவ முன்வருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஒரு எஃப்.ஆர்.யு. உறுப்பினர் தற்போது ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உள் இரத்தக் கசிவு, தலை மற்றும் வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பக்ரி கூறினார்.
காயமடைந்த மேலும் எட்டு உறுப்பினர்கள் இன்னும் தெலோக் இந்தான் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று காலை 8.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஈப்போ சுங்கை செனாம் 5வது பிரிவைச் சேர்ந்த 18 குழு உறுப்பினர்களுடன் பயணம் செய்த
எஃப்.ஆர்.யு. வாகனம் கற்கள் ஏற்றி வந்த லோரியுடன் மோதியது.
இந்த விபத்தில் ஒன்பது எஃப்.ஆர்.யு. உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.மேலும் இருவர் படுகாயங்களுக்கும் எழுவர் காயங்களுக்கும் உள்ளாயினர்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட 45 வயதான லாரி ஓட்டுநரை 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41 இன் கீழ் விசாரணைகாக நான்கு நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நைடாதுல் அதிரா அஸ்மான் இன்று உத்தரவு பிறப்பித்தார்.


