ஈப்போ, மே 14 - நேற்று, தெலோக் இந்தானில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் FRU எனப்படும் சேமப் படையின் உறுப்பினர்கள் 9 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநர் இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று நீதிமன்றத்தில் 45 வயதுடைய அந்த ஓட்டுநருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நடியாதுல் அதிரா அஸ்மான் பிறப்பித்தார்.
ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தைச் செலுத்தி மரணம் விளைவித்ததற்காக, 1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டம் செக்ஷன் 41(1)இன் கீழ் அந்நபர் விசாரிக்கப்படுவதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏ.சி.பி டாக்டர் பக்ரி சைனால் அபிடின் தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்போகாத அபராதமும் விதிக்கப்படுவதோடு, ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதற்கும் அல்லது பெறுவதற்கும் தகுதி நீக்கம் செய்யப்படும்.
இந்த விபத்தில் ஒன்பது FRU உறுப்பினர்கள் மரணமடைந்துள்ள நிலையில், எஞ்சிய ஒன்பது பேர் பல காயங்களுக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
--பெர்னாமா


