சிங்கப்பூர், மே 14 - சிங்கப்பூரில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,200 ஆக உயரந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 11,100 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல், மருத்துவமனையில் தினசரி அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் சராசரி 102லிருந்து 133 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைந்துள்ளது.
தற்போது, மருத்துவமனைகள் தொற்று அதிகரிப்பை சமாளிக்கும் திறன் கொண்டதாக உள்ளன என சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் நிறுனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதனால் தொற்று அதிகரிப்பதாக அதிகாரிகள் விளக்கினர். தற்போது புழக்கத்தில் இரண்டு முக்கிய தொற்று வகைகளாக LF.7 மற்றும் NB.1.8 இருக்கின்றன.
ஆண்டு முழுவதும் அவ்வப்போது COVID-19 அலைகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்பில் முதியவர்கள், உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மற்றும் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள நபர்கள் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு சிங்கப்பூர் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.


