ஷா ஆலம், மே 14 - கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் 2025
தூய்மையான உணவு வளாகப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த
போட்டியில் பங்கேற்பதன் வழி 3,000 வெள்ளி வரையிலான வெகுமதியைப்
பெறுவதற்குரிய வாய்ப்பு பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை
நடைபெறும் இந்த போட்டியில் உணவகங்கள், கேஃபிடேரியா மற்றும்
பள்ளிச் சிற்றுண்டிச் சாலைகள் பங்கேற்கலாம் என்ற நகராண்மைக் கழகம்
தனது பேஸ்புக் பதிவில் கூறியது.
கோல சிலாங்கூரில் உணவகத் தூய்மை மற்றும் உணவு பாதுகாப்பின்
தரத்தை உயர்த்துவது மற்றும் உணவைக் கையாள்வோர் மத்தியில்
விழிப்பணர்வு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவது ஆகிய
நோக்கங்களின் அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்படுவதாக
நகராண்மைக் கழகம் குறிப்பிட்டது.
கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தில் லைசென்ஸ் பெற்ற
வணிகர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்கள்
வரும் மே 13 முதல் 30 வரை திறந்திருக்கும். https://forms.gle/shF8mck48zzHrc6
என்ற இணைப்பின் வாயிலாக இதற்கான பதிவை செய்யலாம்.
தூய்மையான வளாகப் போட்டியில் முதல் பரிசு பெறும் உணவகத்திற்கு
1,500 வெள்ளியும் இரண்டாம் இடத்தைப் பெறும் உணவகத்திற்கு 1,000
வெள்ளியும் மூன்றாம் இடத்தைப் பெறும் உணவகத்திற்கு 500 வெள்ளியும்
வழங்கப்படும்.
மேல் விபரங்களுக்கு 03-32811684 என்ற எண்களில் நகராண்மைக் கழகத்தின்
சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ளலாம்.


