ஜோகூர் பாரு, மே 14 - தாங்கள் பயணம் செய்த கார் நேற்றிரவு ஜோகூர் பாரு-மெர்சிங் சாலையின் 50வது கிலோமீட்டரில் யானை மீது மோதியதில் அவர்கள் பதற்றம் நிறைந்த தருணத்தை எதிர்கொண்டனர்.
நாற்பது மற்றும் 38 வயதுடைய அத்தம்பதியர் இரவு 9.20 மணியளவில் பெரோடுவா அல்சா வாகனத்தில் கோத்தா திங்கியிலிருந்து மெர்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கோத்தா திங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் யூசோப் ஓத்மான் கூறினார்.
சம்பந்தப்பட்ட இடத்தை அடைந்தபோது திடீரென்று நான்கு யானைகள் சாலையைக் கடந்தன. இதனால் ஓட்டுநர் தவிர்க்க இயலாமல் அந்த வன விலங்குகளில் ஒன்றை மோதினார்.
இந்த மோதலின் விளைவாக வாகனத்தின் முன்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இருப்பினும். இருவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அனைத்து யானைகளும் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் மீண்டும் நுழைந்ததாக நம்பப்படுகிறது எனக் கூறிய அவர், ஆவணங்கள் மற்றும் காப்புறுதி நோக்கங்களுக்காக இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் புகார் அளித்ததாக கூறினார்.
இந்தப் பாதை பெரும்பாலும் காட்டு விலங்குகள் நடமாட்டத்திற்கு ஏற்ற இடமாக இருப்பதால் குறிப்பாக இரவில் கண்காணிப்பை அதிகரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.


