மாஸ்கோ, மே 14 - ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான
உறவுகள் சீரடைந்தவுடன் குறிப்பாக, வர்த்தக ரீதியாக கிடைக்கக் கூடிய
அனைத்து வாய்ப்புகளையும் பற்றிக் கொள்ள மலேசியா தயாராக இருக்க
வேண்டும்.
பல்வகை வளங்களையும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில்
தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ள காரணத்தால் ரஷ்யாவில் உள்ள
வர்த்தக வாய்ப்புகளை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்
என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.
மலேசியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு
நிலவி வருகிறது. எனினும், அந்த உறவு அவ்வளவு பிரகாசமானதாக
இல்லை. காரணம் ரஷ்யா மீது அமெரிக்கா தன்னிச்சையாகப் பொருளாதாரத்
தடையை விதித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை
பயன்படுத்திக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். ரஷ்யா-
அமெரிக்கா உறவுகள் சீரடைந்தவுடன் அந்த வாய்ப்புகளை நாம்
பயன்படுத்திக் கொள்ள இயலும் என்றார் அவர்.
முந்தைய அரசை விட தற்போதைய அரசு வேறுபட்ட கண்ணோட்டத்தைக்
கொண்டுள்ளது. உறவுகள் மேம்பட்டவுடன் நமக்கு பல நன்மைகள்
கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்று நேற்று இங்கு நடைபெற்ற
மலேசியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ரஷ்யாவுக்கான நான்கு நாள்
அதிகாரப்பூர்வ வருகையின் ஒரு பகுதியாக அங்குள்ள
மலேசியர்களுடனான இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
ரஷ்யாவில் உள்ள மலேசிய மாணவர்கள் நாட்டின் நற்பெயரை தொடர்ந்து
கட்டிக் காத்து வர வேண்டும் என்றும் முகமது ஹசான் கேட்டுக்
கொண்டார். தாயகம் திரும்பியதும் அவர்கள் நாட்டிற்கு தேவைப்படக்கூடிய
மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் பங்களிப்பை வழங்க
வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


