கோல சிலாங்கூர், மே 14 - சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும்
வெள்ளம் உள்பட நீர் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு
காணக்கூடிய நீர் பெருந்திட்டத்தை சிலாங்கூர் அரசு வரைந்து வருகிறது.
அடுத்தாண்டு தயாராகும் என எதிர்பார்க்கப்படும் இத்திட்டம் வறட்சியை
கையாள்வது மற்றும் வெள்ளத்தின் பொது பெருகும் அதிகப்படியான நீரை
மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டியாகவும் பயன்படுத்தப்படும் என்று
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நீர் குறையும் போது விநியோகப் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதே சமயம்
அதிகப்படியான நீர் வெள்ளத்திற்கு காரணமாகிறது. ஆகவே, இவ்விரு
அம்சங்களையம் நாம் விரிவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்
என அவர் சொன்னார்.
இந்த பெருந்திட்டத்தை உருவாக்குவதற்கு சிறிது காலம் பிடிக்கும்.
ஓராண்டு கூட ஆகலாம். கூடுதல் நீரை மேலாண்மை செய்வதற்கான
வழிகளை நாம் அறிந்திருக்க வேண்டும் என்பதோடு வறட்சி காலத்தில்
குளங்களையும் தயார் படுத்த வேண்டும் என்றார் அவர்.
நேற்று இங்கு இங்கு மூல நீர் உத்தரவாதத் திட்டத்தின் ஏ மற்றும் சி
தொகுப்பு குளங்கள ஒப்படைக்கும் நிகழ்வுக்கு தலைமை தாங்கியப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாநில அரசு செயலாளர் டத்தோ டாக்டர் அகமது
ஃபாட்சில் அகமது தாஜூடின், உள்கட்டமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷம், ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின்
தலைமைச் செயல்முறை அதிகாரி ஆடாம் சபியான் கசாலி ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
சிலாங்கூரில் நீரை மாசுபடுத்தும் குற்றங்கள் தொடர்பான சட்டங்களை
மறுசீரமைப்பு செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக
அமிருடின் சொன்னார்.
குற்றவளிகள் புரிந்த குற்றங்களை நிரூபிப்பதில் தற்போது சிக்கல்கள்
நிலவுவதால் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரிய (லுவாஸ்) சட்டத்தின் கீழ்
நீரை மாசுபடுத்துவோர் மீது குற்றஞ்சாட்ட முடியாத சூழல் நிலவுவதாக
அவர் தெரிவித்தார்.


