கோலாலம்பூர், மே 14 - சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸில் கடந்த மாதத் தொடக்கத்தில்
ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை ஈராண்டுகளில் பழுது பார்த்து முழுமையாக மறுநிர்மாணிப்பு செய்ய முடியும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சு மதிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 219 குடியிருப்பாளர்களின் வீடுகளை சீரமைக்கும் மற்றும் மறுநிர்மாணிப்பு செய்யும் பணிகள் இதுவரை திட்டமிடப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ங்கா கோர் மிங் கூறினார்.
குத்தகையாளர்கள் தற்போது சீரமைப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முற்றிலுமாகப் புதிய வீடுகளை கட்டித் தர முடியும் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற பெர்னாமா தொலைக்காட்சியின் ருவாங் பிச்சாரா நிகழ்வில் "UN-HABITAT: மலேசியா உலகளாவிய இலாபகரமான வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது" என்ற தலைப்பிலான விவாத நிகழ்வில் பங்கேற்பதற்கு முன் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்
இந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பொது உள்கட்டமைப்பை சீரமைக்கும் பணிக்காக வீடமைப்பு அமைச்சு மூலம் அரசாங்கம் 4.6 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக ங்கா கூறினார்.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி நிகழ்ந்த எரிவாயு குழாய் தீ விபத்தில் தீ 30 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு எழுந்து வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. மேலும் தீயை முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் ஆனது.
இந்த சம்பவத்தின் விளைவாக 81 வீடுகள் முற்றிலுமாக அழிந்தன. மேலும் 81 வீடுகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக சேதமடைந்த வேளையில் 57 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. ஆனால் எரியவில்லை. மற்ற 21 வீடுகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


