அலோர்ஸ்டார், மே 14 - காதல் மோசடியில் சிக்கிய பெண்மணி ஒருவர்
தனது வாழ்நாள் சேமிப்புத் தொகையான சுமார் 10 லட்சம் வெள்ளியைப்
பறிகொடுத்தார்.
ஐம்பது மூன்று வயதான அந்த மாதுவுக்கு கடந்தாண்டு ஜனவரி மாதம்
26ஆம் தேதி ஏமன் நாட்டவர் எனக் கூறிக் கொண்ட நபருடன் பேஸ்புக்
மூலம் அறிமுகம் கிடைத்ததாக கெடா மாநில வர்த்தக குற்றப்
புலனாய்வுத் துறையின் தலைவர் சூப்ரிண்டெண்டன் லோய் இயு லிக்
கூறினார்.
பின்னர் அவ்விருவரும் வாட்ஸ்ஆப் செயலி மூலம் தங்களின் நட்பைத்
தொடர்ந்த வேளையில் திருமணம் செய்து கொள்வதற்கான
அடையாளமாக அந்த ஏமன் நாட்டவர் இரு மோதிரங்களை அம்மாதுவுக்கு
அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அந்த மாதுவைத் தொடர்பு
கொண்ட சந்தேகப்பேர்வழி தாம் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதால்
கொடுத்து உதவும்படியும் மணம் புரிவதற்கு மலேசியா வரும் போது
வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைத்து விடுவதாகவும் கூறியுள்ளார்
என்று அவர் சொன்னார்.
அந்த அந்நிய நாட்டவர் மீது கொண்ட காதலாலும் நம்பிக்கையாலும் அந்த
மாது கடந்தாண்டு பிப்வரி 5ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை 166
பரிவர்த்தனைகள் மூலம் 15 வங்கிக் கணக்குகளுக்கு 925,850 வெள்ளியை
அனுப்பியதாக லோய் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அந்த ஆடவர் மலேசியா வரத்தவறியதோடு அவரது பேஸ்புக் கணக்கும்
முடக்கப்பட்டதால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாது இது குறித்து கோல மூடா மாவட்ட போலீஸ் தலைமையத்தில் கடந்த 12ஆம தேதி புகார் செய்தார் என அவர் சொன்னார்.


