மாஸ்கோ, மே 14 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நான்கு நாள்
அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு நேற்றிரவு ரஷ்யா சென்றடைந்தார்.
உள்நாட்டு நேரப்படி மாலை 6.26 மணிக்கு ( மலேசியா நேரம் இரவு மணி
11.26) மாஸ்கோ வந்தடைந்த அன்வாருக்கு வுனோகோவோ-2 விமான
நிலையத்தில் சடங்குப்பூர்வ வரவேற்பு நல்கப்பட்டது.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சடங்குப்பூர்வ வரவேற்பைப் பெறும் முதல்
மலேசிய பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் விளங்குகிறார். கடந்த 2007ஆம்
ஆண்டு ரஷ்யாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அப்போதைய
பிரதமர் மறைந்த துன் அப்துல்லா அகமது படாவி இத்தகைய
வரவேற்பைப் பெற்றார்.
விமான நிலையத்தில் பிரதமரை ரஷ்யாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ
சியோங் லுன் லாயும் ரஷ்யா அரசாங்கத்தின் சார்பில் துணை வெளியுறவு
அமைச்சர் அண்ட்ரே ருடேன்கோவும் வரவேற்றனர்.
ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் நேற்று தொடங்கி
வரும் 16ஆம் தேதி வரை பிரதமர் ரஷ்யாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை
மேற்கொள்கிறார். மாஸ்கோ மற்றும் தாத்தார்ஸ்தான் குடியரசுத் தலைநகர்
கஸானில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர்
பங்கேற்கவிருக்கிறார்.
பிரதமரின் உயர் மட்டப் பேராளர் குழுவில் வெளியுறவு அமைச்சர்
டத்தோஸ்ரீ முகமது ஹசான், விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது சாபு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்
புத்தாக்கத் துறை அமைச்சர் சாங் லி காங், உயர்கல்வி அமைச்சர்
டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ப்ரி அப்துல் காடீர், தோட்ட மற்றும் மூலப் பொருள்
அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோஹாரி அப்துல் கனி ஆகியோர் இடம்
பெற்றுள்ளனர்.
தனது பயணத்தின் முதல் நிகழ்வாக ரஷ்யாவில் வசித்து வரும்
மலேசியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் அன்வார் நேற்றிரவு
பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இன்று இருபது ரஷ்யா தொழில் துறை
தலைவர்களுடன் வட்டமேசை கலந்துரையாடலில் பங்கேற்பார்.
கடந்தாண்டு மலேசியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய வர்த்தக
பங்காளியாக மலேசியா விளங்கியது. இதன் வர்த்தக மதிப்பு 1,146 கோடி
வெள்ளியாக (248 கோடி அமெரிக்க டாலர்) இருந்தது.


