தெலோக் இந்தான், மே 13 - கே.பி.கே.டி-இன் மடாணி கிராமத் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு மேற்கொண்ட 10 சீரமைப்பு கட்டுமானங்கள் நிறைவடைந்துள்ளன.
இத்திட்டத்தின் மூலம் பேராக், தெலோக் இந்தான் கம்போங் பஹாகியாவில் உள்ள 8,570 குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள் என்று கே.பி.கே.டி அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 31-ஆம் தேதி முழுமையாக நிறைவடைந்த அந்த 10 திட்டங்களில், சமூக மண்டபங்கள் மற்றும் குப்பைக் கிடங்குகள் உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 25 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக ஙா கோர் மிங் கூறினார்.
மேலும், மைல்கல் கட்டுமானத்திற்கு 96,000 ரிங்கிட்டும் நிலையான கழிவு சேகரிப்பு மையத்தின் கட்டுமானத்திற்கு 70,000 ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டது.
"ஆகவே, தற்போது கிராம மக்கள் தங்களின் கிராமத்தை கவனித்துக் கொள்ளும் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. வசதிகள் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய 24 மணி நேரமும் செயல்படும் ஓர் அறையையும் நாங்கள் அமைத்துள்ளோம்," என்றார் அவர்.
கே.பி.கே.டி-இன் மடாணி கிராம தத்தெடுப்பு திட்டத்திற்காக, PRIMA மலேசியா கழகமும் தங்களின் சமூக மேம்பாட்டு கடப்பாட்டிற்காக 91,810 ரிங்கிட்டை வழங்கியுள்ளது என்றார்.
--பெர்னாமா


