கோலாலம்பூர், மே 13 — சிலாங்கூரில் மின்னணு சிகரெட்டுகளை விற்பனை செய்வதை தடை செய்யும் திட்டம் குறித்து மாநில நிர்வாக கவுன்சிலர்கள் விவாதிப்பார்கள் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி கூறினார்.
பல நிறுவனங்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் மாநில நிர்வாக கவுன்சிலர் ஜமாலியா ஜமாலுடின் இந்த திட்டத்தை முன்வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
“மாநில அரசாங்கத்தின் எந்தவொரு முடிவும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பதால், ஓர் ஆவணத்தை எழுதி கவுன்சிலுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தியுள்ளேன்,” என அவர் கூறினார்.
மூல நீர் உத்தரவாதத் திட்டத்தின் A மற்றும் C தொகுப்புகள் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, மந்திரி புசார் அலுவலகத்துடனான சந்திப்பில் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை, உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் ஈடுபட்டதாக ஜமாலியா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
வேப் விற்பனை தொடர்பான அமலாக்கம், சட்ட மற்றும் சமூக-பொருளாதார அம்சங்கள் குறித்த விரிவான கண்ணோட்டத்தைப் பெறுவதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றதாக அவர் கூறினார்.
ஏப்ரல் 24 அன்று, திரங்கானு மாநில அரசு ஆகஸ்ட் 1 முதல் மின்னணு சிகரெட்டுகளுக்கு விற்பனைத் தடையை அமல்படுத்தும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
— பெர்னாமா


