சிரம்பான், மே 13 - நெகிரி செம்பிலானில் ஜாலான் தெமியாங்- பந்தாய் சாலையை கருஞ்சிறுத்தை ஒன்று கடந்து செல்லும் காட்சி வாகனம் ஒன்றின் டேஸ்கேமில் பதிவானது. அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த காணொளியை நெகிரி செம்பிலான் வனவிலங்கும் மற்றும் பூங்காத்துறையின் இயக்குனர் பைசால் இஷாம் பிக்ரி உறுதிப்படுத்தியதோடு அந்த சாலையை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அந்த சாலைப் பகுதியில் வனவிலங்குகள் கடக்கும் என ஏற்கனவே எச்சரிக்கை அடையாளப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதோடு மலாயா புலிகள் பிரிவு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவம் அவர் கூறினார்.
அந்த சுருஞ்சிறுத்தை எதிர்ப்புறத்திலுள்ள வனப் பகுதியை நோக்கி கடந்து சென்றதை 11 வினாடிகளைக் கொண்ட காணொளியில் காண முடிகிறது.
மேலும், சைக்கிளோட்டம் மற்றும் மெது ஓட்டத்தில் ஈடுபடுபவர்கள் இந்த சாலையை பயன்படுத்துவதோடு, சாலை பயனர்கள் தங்களது வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு புகைப்படம் செலுத்துவதிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


