புத்ராஜெயா, மே 13 - நாடு முழுவதும் போதைப் பழக்கம் மற்றும் போதைப் பொருளைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் அது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் தவறாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10.5 சதவீதம் குறைந்து 108,409 ஆகக் ஆகியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார். கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 121,170 பேராக இருந்தது.
மொத்தம் உள்ள 108,409 பேரில் 40 சதவீதம் பேர் மீண்டும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 60 விழுக்காட்டினர் பேர் புதியவர்கள் என்றும் அவர் கூறினார்.
திரங்கானு மாநிலத்தில் உள்ள போதைப் பித்தர்களின் எண்ணிக்கை 100,000 பேருக்கு 663 பேர் என்ற அளவில் மிக அதிக எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளதாகக் கூறிய அவர், அதனைத் தொடர்ந்து 609 பேருடனும் பெர்லிஸூம் 597 பேருடனும் கிளந்தானும் உள்ளன என்றார்.
கிளந்தானில் போதைப் பொருள்கள் கடத்தி வரக்கூடிய சட்டவிரோத தளங்கள் மற்றும் குறுக்கு வழித்தடங்களை மூடுவதில் நாங்கள் பெற்ற வெற்றி முதல் காலாண்டில் போதைப் பித்தர் எண்ணிக்கை சரிவுக்கு பங்களித்தது என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற உள்துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தீவிர எல்லைக் கட்டுப்பாடு தவிர, தொடர்ச்சியான அமலாக்க நடவடிக்கைகளை செயல்படுத்துவது, இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து தீவிரப்படுத்தப்பட்ட பொது விழிப்புணர்வு திட்ட அமலாக்கம் ஆகியவை வாயிலாகவும் இந்த குறைவு ஏற்பட்டதாக சைபுடின் சொன்னார்.
போதைப் பழக்கத்திற்கு அடிமையாகும் அபாயம் மூன்று ஆண்டுகளில் ஏற்றம் கண்டு கடந்த 2022 ஆம் ஆண்டில் 137,176 பேராகவும் 2023 ஆம் ஆண்டில் 145,526 பேராகவும் அதிகரித்தாகவும் அவர் கூறினார்


