ஷா ஆலம், மே 13 - கெஅடிலான் ராக்யாட் கட்சியின் கௌரவத்தையும்
நன்மதிப்பையும் நிலைநாட்டுவதற்கு ஏதுவாக 2025/2028 தவணைக்கான
கட்சித் தேர்தலில் சரியான முடிவை எடுக்கும்படி உறுப்பினர்களை
கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக்
கொண்டார்.
போராட்டங்களைத் தொடர்வதற்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
பிரதமராக தொடர்ந்து நீடிப்பதற்கும் கட்சிக்கு வலுவான தலைமைத்துவம்
தேவைப்படுகிறது என்று சிலாங்கூர் மந்திரி புசாருமான அவர்
சொன்னார்.
இந்த ஜனநாயக நடைமுறையை கட்சி உறுப்பினர்கள் நியாயமான மற்றும்
வெளிப்படையான உணர்வுடன் வரவேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்
கொண்டார்.
கெஅடிலான் கட்சியின் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக நாம்
அனைத்து நிலைகளிலும் அணுக்கமாகி சக்தியை ஒன்று திரட்ட
வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தனது பேஸ்புக்
பதிவில் கூறினார்.
நாம் அனைவரும் போராடி வரும் ரிபோர்மாசி கோட்பாட்டை
வலுப்படுத்தவதற்கு ஏதுவாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடர்ந்து
பிரதமராக நீடிப்பதை உறுதி செய்வது நமது பிரதான இலக்காகும் என
அவர் சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின்
தலைவருமான அமிருடின் குறிப்பிட்டார்.
முன்னதாக அவர், பேராக் மாநில கெஅடிலான் கட்சி உறுப்பினர்களுடன்
சந்திப்பு நடத்தினார். கட்சியை வலுப்படுத்துவது, ரிபோர்மாசி அச்சு மற்றும் ஒற்றுமை அரசின் அடிப்படை கூறு ஆகியவற்றுக்கேற்ப தாம் கட்சியின் உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளவிருப்பதாக அமிருடின் முன்னதாக
கூறியிருந்தார்.
எதிர்வரும் மே 23ஆம் தேதி ஜோகூர் பாருவில நடைபெறவிருக்கும்
இத்தேர்தலில் மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கு மொத்தம் 12
வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


