புத்ரா ஜெயா, மே 13 - இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் 15 வரை
போலியான 10,493 உள்ளடக்கங்களையும் 30,427 இணைய மோசடி
உள்ளடக்கங்களையும் இணையத்தளத்திலிருந்து தொடர்பு மற்றும்
பல்லுடக ஆணையம் (எஸ்.கே.எம்.எம்.) வாயிலாக தகவல் தொடர்பு
அமைச்சு நீக்கியது.
இணையத்தில் வெளிவரும் உள்ளடக்கங்களை சரிபார்க்காமல் படித்து
அப்படியே ஏற்றுக் கொள்ளும் போக்கை சமூகம் இனியும் கடைபிடிக்க
முடியாது என்று தகவல் தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங்
கூறினார்.
தற்போது பெரும்பாலோர் தகவல்களை இணையத்தின் வாயிலாக படித்து
தெரிந்து கொள்கின்றனர். இது தவறு கிடையாது. காரணம் தொழில்நுட்ப
விரிவாக்கத்திற்கு ஏற்ப மேம்பாடுகளை நாம் கிரகித்துக் கொள்ள
வேண்டியுள்ளது.
இருப்பினும், இணையத்தில் வரும் தகவல்களை ஏற்று தெரிந்து
கொள்வதற்கு இலக்கவியலில் இன்றைய சமூகம் திறன் பெற்றதாக
இருப்பது அவசியம். ஏனென்றால், இணையத்தில் வரும் அனைத்து
செய்திகளையும் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என அவர்
சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற தகவல் தொடர்பு அமைச்சின் 2025ஆம்
ஆண்டிற்கான வாருங்கள் கற்போம் எனும் நிகழ்வில் உரையாற்றும் போது
அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் பிரதான
ஆசிரியர் அருள் ராஜூ துரைராஜ், பொருளாதாரச் செய்தி பிரிவின் பிரதான
ஆசிரியர் அஸாலினா அஜிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்கள் சரியான முறையில் பகிரப்படுவதை உறுதி செய்வதற்காக
மடாணி அரசாங்கம் பிள்ளைகளுக்கான இணைய அணுகல்
பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்வதில் அக்கறை காட்டி
வருகிறது. இதன் அடிப்படையில் இவ்வாண்டு பாதுகாப்பான இணையம்
எனும் பிரச்சாரத்தை அது மேற்கொண்டு வருகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.


