ஈப்போ, மே 13 - அரச மலேசியன் போலீஸ் படையின் மத்திய சேமப்படை (எஃப்.ஆர்.யு.) லோரி மற்றும் கற்கள் ஏற்றிய லோரி சம்பந்தப்பட்ட கோர சாலை விபத்தில் எட்டு பேர் உயிரிழந்த வேளையில் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து தெலுக் இந்தானில் உள்ள ஜாலான் சிக்குஸ்-சுங்கை லாம்பாம் சாலையில் இன்று காலை நிகழ்ந்தது.
கீழ் பேராக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி டாக்டர் பக்ரி ஜைனல் அபிடினைத் தொடர்பு கொண்டபோது அவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்த விபத்தில் எட்டு பேர் உயிழந்த வேளையில் மூவர் படுகாயங்களுக்கும் மேலும் ஏழுவர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் தொடர்பில் ஊடக அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த விபத்து குறித்து இன்று காலை 8.54 மணிக்கு தனது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு இயக்குநர் சயானி சைடோன் கூறினார்.
தெலுக் இந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் அடங்கிய குழு எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தது. மத்திய சேமப் படை லோரியுடன் கற்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். எஃப்.ஆர்.யு. லோரியில் இரண்டு பேர் சிக்கியிருந்தனர்.
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது சமீபத்திய தகவல்களை நாங்கள் வழங்குவோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


