தோக்கியோ, மே 13 - உலகளவில் சுமார் 20,000 வேலைகளை குறைக்க ஜப்பானிய வாகன உற்பத்தியாளர் நிசான் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இது அந்நிறுவனத்தின் போராடும் வணிகத்தை மீட்டெடுக்க ஆழமான மறுசீரமைப்பு முயற்சிகளில் ஒரு பகுதியாகும்.
மேலும் இந்த நடவடிக்கை நிசானின் உலகளாவிய பணியாளர்களில் சுமார் 15 சதவீதத்தைக் குறிக்கிறது.
அதுமட்டுமில்லாமல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் அதிகரித்த வாகன கட்டணங்கள், வாகன உற்பத்தியாளர்களின் செயல்திறனில் ஏற்படுத்தும் தாக்கத்தை சந்தை பார்வையாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
உற்பத்தி திறனை ஒழுங்குபடுத்துவதற்கும் குறைந்து வரும் விற்பனையை நிவர்த்தி செய்வதற்கும் ஜப்பானில் உள்ள அதன் ஐந்து உள்நாட்டு வாகன ஆலைகளில் ஒன்றை மூடுவதையும் அந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது.
இருப்பினும், அத்தகைய நடவடிக்கை தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில், அமெரிக்கா மற்றும் சீன சந்தைகளில் பலவீனமான செயல்திறனுக்கு பதிலளிக்கும் விதமாக, 9,000 வேலைகளை நீக்குவதற்கும், 2026 நிதியாண்டில் உலகளாவிய உற்பத்தி திறனை 20 சதவீதம் குறைப்பதற்கும் நிசான் திட்டங்களை வெளியிட்டது.
பிப்ரவரியில், தாய்லாந்தில் உள்ள ஒரு ஆலையையும், அடையாளம் காணப்படாத இரண்டு தொழிற்சாலைகளையும் மூடுவதாக அந்நிறுவனம் அறிவித்தது.
— பெர்னாமா-கியோடோ


