கோத்தா பாரு, மே 13 - கோல கிராய், கம்போங் பாஹியில் பி.ஜி.ஏ.
எனப்படும் பொது நடவடிக்கைப் படைப்பிரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை
மேற்கொண்ட ஓப் தாரிங் வாவாசான் நடவடிக்கையில் சட்டவிரோதமாக
மணல் எடுக்கும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
கோத்தா பாரு மாவட்ட நில அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் மாலை
4.15 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பி.ஜி.ஏ.
தென்கிழக்கு பட்டாளத்தின் கட்டளை அதிகாரி டத்தோ நிக் ரோஸ்
அஸான் நிக் அப்துல் ஹமிட் கூறினார்.
அங்கு மூன்று உள்நாட்டினர் மற்றும் மூன்று வங்காளதேச ஆடவர்களிடம்
நடத்தப்பட்ட விசாரணையின் போது சட்டப்பூர்வமாக மணல்
எடுப்பதற்கான எந்த ஆவணத்தையும் அவர்களால் காட்ட இயலவில்லை
என்று அவர் சொன்னார்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது மணலை ஆற்றிலிருந்து
உறிஞ்சி எடுக்க உதவும் சாதனங்கள், மண்வாரி இயந்திரம், லோரி உள்பட
20 லட்சம் வெள்ளி மதிபிபிலான பல்வேறு உபகரணங்கள் பறிமுதல்
செய்யப்பட்டன என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
இந்த வழக்கு 1965ஆம் ஆண்டு தேசிய நிலச் சட்டத்தின் 426வது பிரிவின்
கீழ் விசாரிக்கப்படுகிறது. கைது செய்யபட்ட்ட நபர்களும் பறிமுதல்
செய்யப்பட்ட சாதனங்களும் மேல் நடவடிக்கைக்காக கோத்தா பாரு நில
மற்றும் கனிமவளத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர்
குறிப்பிட்டார்.
இதனிடையே, ஓப் தாரிங் வாசாசான் நடவடிக்கையின் ஒரு பகுதியாக
தும்பாட், கம்போங் தெர்பாயிக்கில் இரு லோரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட
சோதனையில் கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் தேங்காய்கள் பறிமுதல்
செய்யப்பட்டன என்றும் அவர் கூறினார்.
இச்சோதனையின் போது மூன்று உள்நாட்டு ஆடவர்கள் 45,100 கிலோ
எடையுள்ள தேங்காய்களை டிரெய்லர் லோரியிலிருந்து லோரி ஒன்றுக்கு
மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகள் மேற்கொண்ட
ஆய்வில் அந்த தேங்காய்களை கொள்முதல் செய்ததற்கான எந்த
ஆவணமும் அவர்களால் காட்ட இயலவில்லை என்றார் அவர்.


