பாலிக் பூலாவ், மே 13 - தார் ஏற்றி வந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து
வளைவில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஜே.டி.எஸ். வியூவிங் பாய்ண்ட், கம்போங் பொண்டோக் உபி
அருகே நேற்றிரவு நிகழ்ந்தது.
இந்த விபத்தின் காரணமாக ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் உள்ள
கேபினில் சிக்கிக் கொண்ட 44 வயதுடைய அந்த ஓட்டுநர் பலத்த
காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பினாங்கு
மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி
இயக்குநர் ஜோன் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் நேற்றிரவு 10.22 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட தீயணைப்புக்
குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவ இடத்தை அடைந்த போது தார் ஏற்றி லோரி ஒன்று மேடான
சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளதைக் கண்டனர்.
இந்த விபத்தின் எதிரொலியாக அதன் ஓட்டுநர் இருக்கையிலிருந்து
தூக்கியெறியப்பட்டு பின்புற கேபினில் சிக்கிக் கொண்டிருந்தார் என அவர்
சொன்னார்.
இரண்டு மணி நேரப்போராட்டத்திற்குப் பிறகு அந்த லோரிய
நிலைப்படுத்திய தீயணைப்பு வீரர்கள், சிறப்பு உபகரணங்களைப்
பயன்படுத்தி சுமார் 12.48 மணியளவில் ஓட்டுநரின் உடலை
இடிபாடுகளிலிருந்து மீட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
அந்த ஓட்டுநரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம்
ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை பின்னிரவு 1.35
மணியளவில் முடிவுக்கு வந்தது என்றார் அவர்.


