கப்பாளா பாத்தாஸ், மே 13 - மூன்று வயதான தனது உறவுக்கார குழந்தையை அடித்து சித்திரவதை செய்த சந்தேகத்தின் பேரில் 34 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை பெனாகா, பூலாவ் மெர்தாஜாமில் நிகழந்தது.
அக்குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் சந்தேக நபர் நேற்றிரவு 12.00 மணியளவில் பெர்த்தாமில் கைது செய்யப்பட்டதாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் சி. தர்மலிங்கம் தெரிவித்தார்.
கிளந்தானில் வேலை செய்து வரும் அக்குழந்தையின் தந்தை தனது மகனை வீடியோ அழைப்பின் மூலம் தொடர்பு கொண்ட சமயம் தனது முன்னாள் மைத்துனர் குழந்தையைத் பிரம்பால் அடிக்கும் காட்சியைக் கண்டதாக அவர் தெரிவித்தார்.
அச்சமயம் அக்குழந்தை அழுது கொண்டிருந்தது. சந்தேக நபர் அக்குழந்தையின் தாயான தனது முன்னாள் மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார் என்று அவ்வாடவர் தனது புகாரில் கூறியுள்ளதாக அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தையின் கால்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறிய தர்மலிங்கம், துன்புறுத்தும் நோக்கில் அல்லாமல் அடிக்கடி அழும் காரணத்திற்காகவே அக்குழந்தையை அடித்ததாக சந்தேக நபர் கூறினார் என்றார்.
சந்தேக நபர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 2001ஆம் சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுவதாகவும் தர்மலிங்கம் கூறினார்.


