NATIONAL

ஏப்ரல் 20-26 வரை நாட்டில்  99,601 கை,கால், வாய்ப் புண் நோய்ச் சம்பவங்கள் பதிவு

13 மே 2025, 2:05 AM
ஏப்ரல் 20-26 வரை நாட்டில்  99,601 கை,கால், வாய்ப் புண் நோய்ச் சம்பவங்கள் பதிவு

புத்ராஜெயா, மே 13 - ஏப்ரல் 20 முதல் 26 வரையிலான 17வது நோய்த் தொற்று வாரத்தில்   நாடு முழுவதும் மொத்தம் 99,601 கை, கால் மற்றும் வாய்ப் புண் நோய்ச் (எச்.எப்.எம்.டி.)  சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பதிவான  27,236 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது இது 266 சதவீதம் அதிகமாகும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

அவற்றில் மொத்தம் 10,421 சம்பவங்கள் (10 விழுக்காடு ) தொற்று நோய்  தொடர்பானவை. அதே நேரத்தில் 89,180 சம்பவங்கள்  (90 சதவீதம்) அவ்வப்போது ஏற்படும் நோய்களாகும் என்று அமைச்சு தெரிவித்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 1,339 நோய்த் தொற்றுகள் பதிவாகின. இவ்வாண்டு 17வது நோய்த் தொற்று வாரம் வரை  2,649 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நோய் தொற்றுகளில்  578 பகல்நேர பராமரிப்பு மையங்களிலும் (22 சதவீதம்) 480 மழலையர் பள்ளிகளிலும் (18 சதவீதம்) 292  பாலர் பள்ளிகளிலும்  (11 சதவீதம் 251 நர்சரி பள்ளிகளிலும் (9 சதவீதம்) நிகழ்ந்தன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிலாங்கூரில் அதிகபட்சமாக 27,118  (27.2 சதவீதம்) நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து ஜோகூரில் 9,864 சம்பவங்களும் (9.9 சதவீதம்), பேரக்கில் 9,347 சம்பவங்களும் (9.4 சதவீதம்), கிளந்தனில் 7,147 சம்பவங்களும் (7.2 சதவீதம்), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா கூட்டரசு பிரதேசங்களில் 6,850 சம்பவங்களும் (6.9 சதவீதம்) பதிவாகியுள்ளன.

கை,கால், வாய்ப் புண் நோய் தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை  என்று சுகாதார அமைச்சு  கூறியது. பகல்நேர பராமரிப்பு மையங்கள், மழலையர் பள்ளிகள், பாலர் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு வீடுகள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 38,285 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றில்  1,140 (3 சதவீதம்) வளாகங்கள் 1988ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் மூட உத்தரவிடப்பட்டன. அதே நேரத்தில் 430 வளாகங்கள் (1 சதவீதம்) தானாக முன்வந்து மூடப்பட்டன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.