பண்டார் பெர்மைசூரி, மே 13 - பொது விடுமுறையைப் பயன்படுத்தி லதா சாங்கா அருவிக்குகுளிக்கச் சென்ற சுல்தான் ஜைனல் அபிடின் பல்கலைக்கழகத்தின் (யுனிசா) எட்டு நண்பர்க ளின் மகிழ்ச்சியை ஒரு நொடியில் சோகமாக மாற்றியது அவர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட மரணம்.
முதல் முறையாக நீர்வீழ்ச்சிப் பகுதிக்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவரான வான் அகமது இர்ஃபான் வான் அப்துல்லா தானி (வயது 24) ஆரம்பத்தில் அருவியின் நடுவில் ஆறு நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்ததாக அவரின் நண்பரான முகமது ஹாடி இசுடின் இக்மால் ஹிசாம் (வயது 23) கூறினார்.
பின்னர் நான் நீர் அருந்த கரைக்குச் சென்றேன். அவர்கள் ஆறு பேரும் அருவியின் நடுப்பகுதியை நோக்கி நகர்வதைக் கண்டேன். அவர்களுக்கு உண்மையில் நீச்சல் அவ்வளவாகத் தெரியாது. சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் நீரில் தத்தளிப்பதைக் கண்டு நான் உடனடியாக உதவச் சென்றேன் என அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களின் உதவியுடன் அவர்களில் ஐந்து பேரைக் காப்பாற்ற முடிந்தது. ஆனால், வான் அகமது இர்பானை நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் சம்பவ இடத்தில் செய்தியாளர்கள் சந்தித்தபோது கூறினார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பில் பிற்பகல் 3.42 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து பத்து பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக செத்தியு தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த செயல்பாட்டு அதிகாரி ஜுரைடி முகமட் யூசுப் கூறினார்.
அந்த சட்டத் துறை மாணவரைத் தேடி மீட்கும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கியது. வான் அகமது இர்பானின் உடல் சுமார் 28 நிமிடங்களுக்குப் பிறகு 4.5 மீட்டர் ஆழத்தில் தண்ணீருக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது.
நீரில் மூழ்கும் நிலையில் மீட்கப்பட்ட பாதிக்கப்பட்டவரின் ஐந்து நண்பர்கள் சிகிச்சைக்காக செத்தியு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதே நேரத்தில் இறந்த மாணவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார் அவர்.


