கோலாலம்பூர், மே 12 - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை ரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் அன்வார் நாளை முதல் வரும் வியாழக்கிழமை வரை மாஸ்கோவிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டாடர்ஸ்தான், கஸானிலும் பயணம் மேற்கொள்வார் என்று அன்வாரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் துங்கு அபைடா கூறினார்.
மாஸ்கோவில் இருக்கும் போது பிரதமர் அன்வார் மாஸ்கோ மாநில அனைத்துலக உறவுகள் பல்கலைக்கழக உரை நிகழ்த்துவார். பின்னர் ரஷ்ய வணிகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்துவதோடு தலைநகரில் உள்ள மலேசிய புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார்.
டாடர்ஸ்தான் குடியரசின் ரைஸ் (தலைவர்) ருஸ்தாம் மின்னிகனோவின் அழைப்பின் பேரில் பிரதமர் 16வது சர்வதேச பொருளாதார மன்றமான கஸான் ஃபோரமிலும் கலந்து கொள்வார் என்று பிரதமர் அலுவலக தினசரி விளக்கக் கூட்டத்தில் அவர் கூறினார். இது இன்று பிரதமர் அலுவலகம் மற்றும் அன்வாரின் முகநூல் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
கஸானில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் கஸான் மன்றத்தின் முழுமையான அமர்வில் அன்வார் முக்கிய உரையை நிகழ்த்துவார். தொடர்ந்து விவேகப் பார்வைக் குழு கூட்டத்திலும் பேசுவார் என்று துங்கு நஷ்ருல் கூறினார்.
நாடு திரும்பியதும் வரும் மே 20 முதல் 24 வரை நடைபெறும் "இன்றே புதுமைப்படுத்துங்கள் நாளை செழிப்பாக்குங்கள் " என்ற கருப்பொருளில் நடைபெறும் லங்காவி அனைத்துலக கடல்சார் மற்றும் வான் கண்காட்சியில் (லீமா) அன்வார் கலந்து கொள்வார் என்று அவர் தெரிவித்தார்.


