ஜோர்ஜ் டவுன், மே 12- இணைய பங்கு முதலீட்டுத் திட்ட மோசடிக் கும்பலின் வலையில் சிக்கி 47 வயதான ஆசிரியர் ஒருவர் 511,000 வெள்ளியை இழந்ததை காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பங்கு முதலீட்டு மோசடிக் கும்பலிலிடம் தாம் பணத்தை பறிகொடுத்தது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நேற்று வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறையிடம் புகார் செய்ததாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது கூறினார்.
பங்குகளை வாங்கி விற்பதை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுத் திட்டம் தொடர்பான விளம்பரத்தை சம்பந்தப்பட்ட ஆசியர் கடந்த பிப்ரவரி மாதம் பேஸ்புக் பக்கத்தில் கண்டதாக அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபருடன் அந்த ஆசிரியர் தொடர்புக் கொண்டதைத் தொடர்ந்து அந்த முதலீடு தொடர்பான புலனக் குழுவில் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.
அந்த முதலீட்டுத் திட்டம் தொடர்பான விபரங்கள் அந்த புலனத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. முதலீடு செய்த தொகையை விட அதிக லாபம் குறுகிய காலத்தில் வழங்கப்படும் என்ற ஆசை வார்த்தையால் அந்த ஆசிரியர் பெரிதும் கவரப்பட்டார் என டத்தோ ஹம்சா சொன்னார்.
பின்னர் அந்த கும்பல் வழங்கிய இணைப்பில் உள்ள செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யும்படி அந்த ஆசிரியர் பணிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மூன்று வங்கிக் கணக்குகளில் 12 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் 511,000 வெள்ளி அவர் சேர்த்த்துள்ளார் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
தமக்கு வழங்கப்பட்ட இணைப்பிலிருந்து லாபத் தொகையை மீட்க முடியாமல் போனதைத் தொடர்ந்து பாதிக்கபட்ட அந்த ஆசிரியர் இது குறித்து போலீசில் புகார் அளித்ததாக அவர் மேலும் சொன்னார்.
இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.


