(ஆர்.ராஜா)
ஷா ஆலம், இங்குள்ள ஜாலான் புக்கிட் கெமுனிங், 8வது மைலில் அமைந்துள்ள ஆயிரம் கரங்கள் பௌத்த சங்க ஆலயத்தில் விசாக தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.
கௌதம புத்தரின் அவதரிப்பை நினைவுக்கூறும் வகையில் நடத்தப்பட்ட சிறப்பு புத்தரின் நீராட்டு நிகழ்வை நடத்துவதற்குரிய வாய்ப்பினை ஆலய நிர்வாகத்தினர் பாப்பராய்டுவுக்கு வழங்கினர்.
ஆன்மிகத்தின் புனிதத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக மலர்களால் நிரப்பப்பட்ட புனித நீரில் கௌதமர் புத்தரின் குழந்தைப் பருவத்துச் சிற்பம் நீராட்டப்பட்டது.
தினசரி வாழ்வில் அமைதியும் சிறப்பும் நிலைத்திருப்பதற்கு ஏதுவாக மனமும் செயல்களும் வெறுப்புணர்வு மற்றும் அறியாமையிலிருந்து விடுபட்டு எப்போதும் புனிதமுடன் இருப்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த நீராட்டுச் சடங்கு நடத்தப்படுகிறது.
இந்த விசாக தினத்தின் சிறப்பு அங்கமாக நிகழ்வில் கலந்து கொண்ட தாய்மார்கள் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பிக்கப்பட்டதோடு ஆதரவற்ற இல்லங்களுக்கும் உதவி நல்கப்பட்டது.


