ஷா ஆலம், மே 12- நாட்டு மக்கள் இனங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதோடு நாட்டின் வளர்ச்சி மற்றும் நலனுக்கு பங்களிக்கவும் வேண்டும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாய்நாட்டின் மீதான ஒற்றுமை மற்றும் அன்பின் உணர்வை தொடர்ந்து வலுப்படுத்துமாறு சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மக்களுக்கு சிலாங்கூர் அரச அலுவலகத்தின் முகநூல் வழி வெளியிட்டப் பதிவில் அறிவுறுத்தினார்.
மற்ற சிறப்பு நாட்களைப் போலவே விசாக தினத்தையும் பௌத்தர்கள் மட்டுமல்லாது பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை விரும்பும் அனைத்து மலேசிய மக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என்று மேன்மை தங்கிய சுல்தான் தெரிவித்தார்.
மேன்மை தங்கிய சுல்தான் சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் அவர்களுடன் இணைந்து பௌத்த சமயத்தினருக்கு விசாக தின வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர் என என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாக தினம் கௌதம புத்தரின் பிறப்பு, விழிப்புணர்வு மற்றும் மறைவைக் குறிக்கிறது. இத்திருநாளில் அவரது சீடர்கள் பிரார்த்தனை செய்து புறாக்களை விடுவித்து ஏழைகளுக்கு உணவளிக்கின்றனர்.


