ஷா ஆலம், மே 12- வெள்ளம் தொடர்பான துல்லியமானத் தகவல்களை பொது மக்கள் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கு ஏதுவாக கோத்தா கெமுனிங் தொகுதி இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் நேற்று சிறப்பு விளக்கமளிப்பு நிகழ்வை நேற்று நடத்தியது.
கோத்தா கெமுனிங் தொகுதி மக்கள் குறிப்பாக ஸ்ரீமூடா மற்றும் புக்கிட் கெமுனிங் குடியிருப்பாளர்கள் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் தொடர்பான கேள்விகளை சம்பந்தப்பட்டத் தரப்பினரிடம் முன்வைத்து உரிய பதிலைப் பெறுவதற்குரிய வாய்ப்பினையும் இந்த நிகழ்வு வழங்கியது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பிரகாஷ் கூறினார்.
வெள்ளத்தை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்து வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை (ஜே.பி.எஸ்) மற்றும் ஷா ஆலம் மாநகர் மன்ற (எம்.பி.எஸ்.ஏ.) அதிகாரிகள் இந்த நிகழ்வில் தெளிவாக எடுத்துரைத்ததாக அவர் சொன்னார்.
அண்மைய காலமாக பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த சந்திப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
இன்று அவர்கள் சரியான தகவல்களை பெற்றனர். வெள்ளத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் வழிகள் குறித்து விரிவாக விளக்கம் தரப்பட்டது. இத்தகைய நிகழ்வுகளின் வாயிலாக பொது மக்கள் நேரடியாக பதில்களை பெற முடிந்தது என்று மீடியா சிலாங்கூரிடம் அவர் தெரிவித்தார்.
இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா, டேவான் அஸாலியாவில் நடைபெற்ற இந்த விளக்கமளிப்பு நிகழ்வில் சுமார் 200 குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்டு மிக மோசமான வெள்ளத்தில் தாமான் ஸ்ரீ மூடா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த மாதம் மீண்டும் ஏற்பட்ட வெள்ளத்தில் தாமான் ஸ்ரீ மூடா தவிர்த்து அருகிலுள்ள புக்கிட் கெமுனிங் வட்டாரமும் பாதிக்கப்பட்டது.

