குவாந்தான், மே 12- மாரான், பெல்டா ஜெங்கா 8 இல் உள்ள வீடொன்றில் கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று நண்பகல் 12.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 29 மற்றும் 51 வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் 30 வயதுடைய மற்றொரு நபர் மாரானில் பிற்பகல் 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டதாக மாரான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் வோங் கிம் வாய் கூறினார்.
இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறிய அவர், 34 வயதுடைய பாதிக்கப்பட்ட ஆடவரின் வீட்டின் சமையலறை வழியாக அக்கும்பல் நுழைந்த வேளையில் அவர்களில் ஒருவன் கத்தியை வைத்திருந்ததாகச் சொன்னார்.
அந்த ஆடவரின் கை, கால்களை நைலான் கயிறு மற்றும் இடுப்பு வார்ப்பட்டையால் கட்டிய அக்கும்பல் புரோட்டோன் எப்எல்எக்ஸ் கார், ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்பட 16,000 வெள்ளி மதிப்புள்ள பொருள்களுடன் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
பின்னர் தன்னை விடுவித்துக் கொண்ட பாதிக்கப்பட்ட அந்த ஆடவர் வீட்டிலிருந்து வெளியேறி அண்டை அயலாரின் உதவியை நாடியதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
முந்தையக் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ள அந்த மூன்று சந்தேக நபர்களும் குற்றம் நிகழ்ந்த 16 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டத்தின் 395/397வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


