கோலாலம்பூர், மே 12- சிலாங்கூர், உலு லங்காட்டில் உள்ள சுங்கை லெப்போ ஆற்றில் உல்லாசமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த ஏழு சிறார்கள் உள்ளிட்ட 18 பேர் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் மிகவும் பதற்றமான தருணத்தை எதிர்நோக்கினர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.09 மணியளவில் தங்களுக்கு புகார் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
அம்பாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட குழு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
சம்பவ இடத்தை அடைந்த அவர்கள் மூன்று ஆண்கள், எட்டுப் பெண்கள் மற்றும் ஏழு சிறார்கள் உள்பட 18 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் மாலை 6.32 மணிவாக்கில் பத்திரமாக மீட்கப்பட்டதாக அகமது முக்லிஸ் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான 30 வயதுப் பெண் மூச்சுத் திணறலுக்கு ஆளானதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் சுகாதார அமைச்சின் மருத்துவப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.


