ஷா ஆலம், மே 12- இந்தோனேசியாவின் வட சுமத்ராவை நேற்று மாலை மிதமான நிலநடுக்கம் தாக்கியது. இதன் எதிரொலியாக தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
ரிக்டர் அளவில் 5.9 எனப் பதிவான அந்த நிலநடுக்கம் மாலை 4.57 மணிக்கு ஏற்பட்டது. இது இந்தோனேசியாவின் மியூலாபோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 107 கிலோமீட்டர் தொலைவிலும் 74 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது என மலேசிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
இந்த சம்பவத்தினால் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. இருப்பினும், தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது என்று அந்த மையம் தனது முகநூலில் குறிப்பிட்டது.
தற்போதைய நிலைமை மற்றும் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அது தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளை உணர்ந்த பொதுமக்கள் தொடர் கண்காணிப்பிற்கு உதவ, https://forms.gle/
இதற்கிடையில், இந்தோனேசியாவின் வட சுமத்ராவைத் தாக்கிய மிதமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பினாங்கில் இரண்டு இடங்களில் நில அதிர்வுகள் உணரபட்டதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன.
புளோக் 1, தாமான் செலாத்தான், ஜெலுத்தோங் மற்றும் சிட்டி பேவியூ ஹோட்டலில் மாலை 5.15 மணியளவில் நில அதிர்வு பதிவாகியதாக அதன் இயக்குனர் முகமட் ஷோகி ஹம்சா தெரிவித்தார்.


