MEDIA STATEMENT

கெஅடிலான் தலைமைத்துவத் தேர்தல் சூடு பிடிக்கிறது- உயர் பதவிகளுக்கு 251 பேர் போட்டி

10 மே 2025, 7:59 AM
கெஅடிலான் தலைமைத்துவத் தேர்தல் சூடு பிடிக்கிறது- உயர் பதவிகளுக்கு 251 பேர் போட்டி

கோலாலம்பூர், மே 10 -- வரும்  2025–2028 தவணைக்கான  கெஅடிலான் ராக்யாட் கட்சியின்   தலைமைப் பதவிகளுக்கான  தேர்தலில் மொத்தம் 251 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளதாக கட்சியின் மத்திய தேர்தல் குழு (ஜே.பி.பி.) தெரிவித்தது.

மத்திய தலைமைத்துவ மன்றத்திற்கு (எம்.பி.பி.) 104 வேட்பாளர்களும் இளைஞர் பிரிவு தலைமைப் பதவிகளுக்கு   (ஏ.எம்.கே.)  85 பேரும் மகளிர் பிரிவு தலைமைத்துவ மன்றத்திற்கு 62 பேரும் போட்டியிடுவதாக  கெஅடிலான் கட்சியின் தேர்தல் குழுத்  தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாலிஹா முஸ்தாபா கூறினார்.

இந்த ஊக்கமளிக்கும்  வகையிலான பங்கேற்பு என வர்ணித்த அவர்,  கெஅடிலான் கட்சிக்கு  வளர்ந்து வரும் திறமைகள் எந்த வகையிலும்  குறைவானவை  அல்ல என்பதை இது நிரூபிக்கிறது என்றார்.

புதிய தலைவர்களை தொடர்ந்து மேம்படுத்தும் மற்றும் உள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஒரு தளமாக கட்சியின் நிலை வலுப்பெற  இது உதவுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில்  தெரிவித்தார்.

குறிப்பாக, இம்முறை  கெஅடிலான் கட்சியின் தலைவர் பதவிக்கும் இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிக்கும் எந்தப் போட்டியும் இல்லை என அவர் சொன்னார்.

கடந்த வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்ற  வேளையில்  ஆட்சேபனை தெரிவிக்க மே 11 மற்றும் மே 12 ஆகிய தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து மே 13 மற்றும் மே 14 ஆகிய தேதிகளில் மேல்முறையீடுகள் செய்யப்படும் என்றும் டாக்டர் சாலிஹா கூறினார்.

வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் மே 15 ஆம் தேதி உறுதிப்படுத்தப்படும்.  அதன் பிறகு அதிகாரப்பூர்வ பிரச்சாரம் உடனடியாகத் தொடங்கி மே 22 ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு முடிவடையும். பிரச்சாரக் காலத்தில் அனைத்து வேட்பாளர்களும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தத் தேர்தல் கட்சியின் குடும்ப நட்புறவின் அடித்தளத்தை வலுப்படுத்தும் மற்றும் ஒன்றிணைக்கும் தருணமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் சாலிஹா கூறிப்பிட்டார்.

நேற்றிரவு 11.59 மணிக்கு  வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில்   பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கெஅடிலான் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இருப்பினும், துணைத் தலைவர்  பதவிக்கு முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்  நூருல் இசா அன்வார் மற்றும் நடப்பு துணைத் தலைவரும்  பொருளாதார அமைச்சருமான  டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி இடையே  போட்டி நிலவுகிறது.

கட்சியின் நான்கு துணைத் தலைவர் பதவிகளுக்கு 12 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கெஅடிலான் மத்திய தலைமைத் தேர்தல் மே 23 அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஹைபிரிட் எனப்படும் நேரடி மற்றும் இணைய வாக்களிப்பு முறை மூலம் நடைபெறும்.

கெஅடிலான் கட்சியின்  தேசிய, இளைஞர் மற்றும் மகளிர்

மாநாடுகள் மே 22 முதல் மே 24 வரை ஜோகூர் பாருவில் நடைபெற உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.