செய்தி (ஆர்.ராஜா)
பந்திங், மே 10- சிலாங்கூர் அரசின் மானியத்தை மாணவர்களின் நலனுக்காக முறையாகவும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்தி வரும் ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளி நிர்வாகத்தினருக்கு மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் மேலாளர் வாரியத்தின் இத்தகைய நடவடிக்கை மாணவர்களுக்கு தரமான கல்வியையும் உகந்த கற்றல் சூழலையும் ஏற்படுத்தித் தருவதற்காக மாநில அரசு எடுத்து வரும் முயற்சிக்கு உரிய பலன் கிடைப்பதை எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது என்று அவர் சொன்னார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கு மாநில அரசு வழங்கும் மானியத்தில் ஐம்பது விழுக்காட்டுத் தொகை பழுதுபார்ப்பு மற்றும் தரம் உயர்த்தும் பணிகளுக்காக கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கி பள்ளி மேலாளர் வாரியத்திடம் வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
இன்று இங்குள்ள பொது மைதானத்தில் நடைபெற்ற ஜென்ஜாரோம் தமிழ்ப்பள்ளியின் 55ஆம் ஆண்டு போட்டி விளையாட்டுகளைத் தொடக்கி வைத்த போது பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வருகையின் போது, அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட பாலர் பள்ளியின் சிற்றுண்டிச்சாலை மற்றும் கடந்தாண்டு மாநில அரசு வழங்கிய மானியத்தின் மூலம் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூரைகள் மற்றும் சிற்றுண்டிச் சாலையின் தரம் உயர்த்தும் பணிகளை நான் நேரில் ஆய்வு செய்தேன்.
மாணவர்களின் நலனுக்காக இந்த நிதியை பள்ளி நிர்வாகத்தினர் ஆக்ககரமான முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நிர்வகிப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் மத்தியில் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த போட்டி விளையாட்டை மிகவும் சிறப்பான முறையில்
ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்திற்கு தாம் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.


