சிரம்பான், மே 10- கெஅடிலான் கட்சித் தேர்தலில் தாம் வகித்து வரும் உதவித் தலைவர் பதவியை தற்காத்துக் கொள்ளவிருப்பதாக நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் கூறியுள்ளார்.
இம்மாதம் 23ஆம் தேதி ஜோகூர் பாருவில் நடைபெறவிருக்கும் 2025-2028 தவணைக்கான கட்சித் தேர்தல் ஆரோக்கியமான ஒன்றாக விளங்கும் என்று நெகிரி செம்பிலான் கெஅடிலான் தலைமைத்துவ மன்றத்தின் தலைவருமான அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கி வரும் அரசியல் சவால்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த தேர்தலை விரிவான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என அவர் சொன்னார்.
இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் அடிமட்ட மக்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே பாலமாக செயல்படும் கடப்பாட்டைக் கொண்டவர்களாகவும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தக்கூடியவர்களாகவும் கெஅடிலானின் இதயத் துடிப்பாக இருந்து வரும் சீர்த்திருத்த கோட்பாட்டின் உந்து சக்தியாகவும் விளங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
2025 கட்சித் தேர்தல் பதவிகளை மட்டும் இலக்காகக் கொண்ட ஒரு தேர்வாக இருக்காது என நான் நம்புகிறேன். மாறாக, கட்சியின் அடிப்படைக் கோட்பாட்டை வலுப்படுத்தக்கூடிய, சீர்திருத்த உணர்வுக்கு புத்துயிரளிக்கக்கூடிய மற்றும் அடுத்த பொதுத் தேர்தல் உள்பட எதிர்காலச் சவால்களை சமாளிக்கக்கும் வகையில் நமது குழுவை வலுப்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பாக அமையும் என்றார் அவர்.
கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட்டும் நீதிக்கான கோட்பாட்டை நிலை நிறுத்தியும் மக்களின் குரலை உயர் நெறியுடனும் பொறுப்புணர்வுடனும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுப்பர் என நான் நம்புகிறேன் என அமினுடின் கூறினார்


