ஜோர்ஜ் டவுன், மே 10- வரும் மே மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் விசாக தினத்தை முன்னிட்டு மலேசியர்களுக்கு இலவச பெர்ரி சேவையை வழங்குவதாக பினாங்கு துறைமுக ஆணையமும் பினாங்கு போர்ட் சென். பெர்ஹாட் நிறுவனமும் அறிவித்துள்ளன.
பெங்கலான் சுல்தான் அப்துல் ஹலிம் செல்லும் மற்றும் பெங்காலான் ராஜா துன் ஊடா இடையே இரு வழிப் பயணத்திற்கும் இந்த இலவச சேவை வழங்கப்படுவதாக பினாங்கு துறைமுக ஆணையத்தின் தலைவர் டத்தோ இயோ சூன் ஹின் கூறினார்.
பெங்காலான் சுல்தான் அப்துல் ஹலிமிலிருந்து முதல் பயணம் அதிகாலை 6.30 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை நீடிக்கும். அதே வேளையில் ராஜா துன் ஊடாவில் காலை 7.00 மணிக்கு தொடங்கும் சேவை இரவு 11.30 மணி வரை நீடிக்கும் என்று அவர் சொன்னார்.
பொது மக்கள் பெர்ரி சேவை தொடர்பான பயண அட்டவணைகளை அவ்விரு நிறுவன அகப்பக்கம் வாயிலாக அறிந்து தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படி அவர் பொது மக்களுக்கு ஆலோசனை கூறினார்.
வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் அதேவேளையில் மிகவும் வசதியான பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த இலவச பயணச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


