கங்கார், மே 10- பாடாங் பெசார், பெசேரியில் உள்ள தீமா தாசோ ஏரியில் நேற்று மாலை பொறியாளர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இருபத்தைந்து வயதான முகமது ஜம்ஹாரீர் ஜூல்கிப்லியின் உடல் அவர் ஏரியில் மூழ்கி இறந்ததாக நம்பப்படும் பகுதியிலிருந்து சுமார் ஐந்து மீட்டர் தொலைவில் பிற்பகல் 2.45 மணியளவில் தீயணைப்புத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது என்று பாடாங் பெசார் மாவட்ட துணை போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் சாரி சாலே கூறினார்.
நேற்று காலை 7.00 மணியளவில் முகமது ஜம்ஹாரீரும் அவரது 24 வயது நண்பரும் மீன்பிடிப்பதற்காக படகில் அப்பகுதிக்குச் சென்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் சொன்னார்.
மீன்களை பிடித்தப் பின்னர் அவர்களின் படகு ஆழமற்ற பகுதியில் சிக்கிக் கொண்டது.
அவர்கள் இருவரும் படகை ஆழமான நீரை நோக்கித் தள்ளினர். ஆனால் முகமது ஜம்ஹாரீரால் மீண்டும் படகில் ஏற இயலவில்லை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
முகமது ஜம்ஹாரீரைக் காப்பாற்ற அவரது நண்பர் மேற்கொண்ட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் அவர் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு காலை 11.40 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக சாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடந்து வருகின்றன. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக துவாங்கு பவுசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.


