ஈப்போ, மே 10- மெங்லெம்புவில் உள்ள பேரங்காடியில் அமைந்துள்ள நகைக்கடையில் நேற்று 390,000 வெள்ளி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிய மூன்று முகமூடிக் கொள்ளையர்களை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தமது துறைக்கு நேற்று மதியம் 1.25 மணிக்கு தகவல் கிடைத்ததாக ஈப்போ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது கூறினார்.
கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும் கத்தி வைத்திருந்ததாக நம்பப்படும் அந்த முகமூடிக் கொள்ளையர்கள் கடையிலிருந்து நெக்லஸ்கள் மற்றும் காதணிகளைக் கொள்ளையிட்டு வெள்ளை நிற டோயோட்டா கேம்ரி காரில் தப்பினர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அபாங் ஜைனல் அபிடின் தெரிவித்தார்.
இக்கொள்ளை தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஏஎஸ்பி ஃபாட்லி அகமதுவை 019-2500 019 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 395/397 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் நகைக்கடையில் வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் செல்வதை சித்தரிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.


