மலாக்கா, மே 9 - சுயநினைவை இழக்கும் அளவுக்கு பெற்றோரால் துன்புறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை இறந்துவிட்டதாக வாட்ஸ்அப் மூலம் பரவிய செய்தியை போலீசார் மறுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சுயநினைவுடன் இருக்கும் அக்குழந்தையால் வழக்கம் போல் பால் குடிக்க முடிவதோடு மலாக்கா மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது என்று மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ ஜூல்கைரி முக்தார் கூறினார்.
குழந்தை இறந்துவிட்டதாகக் கூறுவது தவறானது. அக்குழந்தை இன்று சிறார் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வழக்கமான வார்டுக்கு மாற்றப்படலாம். ஆனால் அது அனைத்தும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் அறிக்கையைப் பொறுத்தது என அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட அக்குழந்தை தற்போது அலோர் காஜா சமூக நலத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்.
மலாக்கா மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற மலாக்கா காவல் தலைமையக இலகு தாக்குதல் பிரிவின் அடிப்படை பாடநெறி தொடரின் நிறைவு விழாவுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
இந்த வழக்கின் விசாரணை அறிக்கை கிட்டத்தட்ட முற்றுப்பெற்று விட்டதாகவும் 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(a) பிரிவின கீழ் முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டுடன் அது துணை அரசு வழக்கறிஞருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.


