புத்ராஜெயா, மே 9 - பேராக், பாடாங் ஈப்போவில் ஏராளமான புறாக்கள் செத்துக் கிடந்த சம்பவத்திற்கு தொற்று நோய் காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது.
இறந்த புறாக்களின் மீது மேற்கொண்ட பரிசோதனைகளின் தொடக்கக் கட்ட முடிவில், Avian Influenza (Al), Newcastle Disease (ND), Adenovirus கண்டறியப்படவில்லை என கால்நடை சேவைத் துறை உறுதிப்படுத்தியது.
மாறாக, அவற்றின் வயிறு நிரம்பியிருந்தது, கல்லீரல் நிறம் மாறியிருந்தது, இரத்தக் கட்டும் காணப்பட்டது மற்றும் நுரையீரலில் இரத்தக் கசிவும் இருந்ததாக கால்நடை சேவைத் துறை தெரிவித்தது.
இதையடுத்து, அவற்றின் உள்ளுறுப்புகளான ஈரல், இருதயம், சிறுநீரகங்கள், நுரையீரல், குடல், மண்ணீரல், போன்றவை ஆய்வுக் கூட சோதனைக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் அப்புறக்கள் மடிந்துபோனதற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய இரசாயணத் துறை சோதனை நடத்தி வருகிறது. அந்த அறிக்கை வந்த பிறகே இறுதி முடிவுக்கு வர முடியும்.
எனவே, விலங்குகளிலிருந்து பரவும் தொற்று நோயிலிருந்து பொதுமக்களையும் கால்நடைகளையும் பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களும், தங்களது பகுதிகளில் சந்தேகத்திற்குரிய வகையில் பறவைகளோ பிற பிராணிகளோ இறந்து கிடந்தால் உடனடியாக தெரியப்படுத்துமாறும் கால்நடை சேவைத் துறை கேட்டுக் கொண்டது.


